இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மதநல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு!
“திருப்பரங்குன்றம் பிரச்சனையில் மதநல்லிணக்கத்தை காக்க தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படுவது வரவேற்பிற்குரியது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்வே தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும், மதநல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மதநல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
வகுப்புவாத சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வலியுறுத்தல்!
மக்களை பிளவுபடுத்த முயலும் வகுப்புவாத சக்திகளின் சூழ்ச்சிகளை தொடர்ந்து உறுதியோடு செயல்பட்டு முறியடிக்க முன்வரவேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்!
தமிழகம் மதநல்லிணக்கத்தை பேணும் மாநிலம் ஆகும். பல்வேறு மதத்தினரும், வெவ்வேறு கலாச்சாரத்தை சேர்ந்தவர்களும் சகோதரத்துவத்துடன் பழகி வாழும் மாநிலம் ஆகும். இப்பாரம்பரியத்தை காக்கும் வகையில் தமிழ்நாடு மக்கள் எப்பொழுதும் போல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். வகுப்புவாத சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு மக்களை கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




