திருப்பரங்குன்றம் விவகாரம் ; ”அமைச்சர் ரகுபதி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்” – அண்ணாமலை…!

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி உண்மைக்கு புறம்பாக பேசுவதாக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தமானது. சிக்கந்தர் தர்கா, நெல்லித்தோப்பு, தர்காவுக்கு செல்லும் பாதை ஆகிய 3 இடங்கள் மட்டுமே தர்கா நிர்வாகத்திற்கு சொந்தமானது. 2014, 2017 ஆம் ஆண்டுகளில் வெளியான தீர்ப்புகளை அமைச்சர் ரகுபதி திரித்து உண்மைக்கு புறம்பாக பேசுகிறார். 44 தடை உத்தரவு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஒரிஜினல் கோப்புகளை தராமல் திருத்தம் செய்து கோப்புகளை வழங்கியுள்ளனர்.

தர்காவில் இருந்து 50 மீட்டரில் உள்ள தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை கிளை நீதிமன்றத்தில், தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆட்சேபம் இருந்தால் தர்கா நிர்வாகம்தான் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தார். திமுக அரசின் அழுத்தத்தின் காரணமாகவே அவர் மேல்முறையீடு செய்திருக்கிறார்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.