திருப்பரங்குன்றம் விவகாரம் ; மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது – கமல்ஹாசன் பதிவு…!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பதிவிட்டுள்ள கமல்ஹாசன் மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது என்று தெரிவித்துள்ளார்.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். கார்த்திகை தீபத் திருநாளான நேற்று முன்தினம் (டிசம்பர் 3), திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் மீது ராம ரவிக்குமார் என்பவர்யர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மதுரை ஆட்சியரின் 144 தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள தீபத்தூணில் உடனே தீபம் ஏற்ற வேண்டும் என்றும், உத்தரவை நிறைவேற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து, பாஜக, இந்துத்வ அமைப்பினர் ஏராளமானோர் திருப்பரங்குன்றத்துக்கு வருகை தந்தனர். அப்போது, காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதனிடையே இன்று நாடாளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி திமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர். ஆனால் இக்கோரிக்கையை மாநிலங்களவை தலைவர் சிபி ராதாகிருஷ்ணனன் மறுக்கவே திமுக கூட்டணி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் நடிகரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது. பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது. அன்பே சிவம், அறிவே பலம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.