பெற்றோர்களைக் கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறை – கேரள முதல்வர் வி.டி. சதீசன்

பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுக்கொண்ட பிறகு அவர்களைப் புறக்கணித்தாலோ அல்லது துன்புறுத்தினாலோ 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் மசோதா கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுக்கொண்ட பிறகு அவர்களைப் புறக்கணிப்பது அல்லது துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.

மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கேரள சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சம் குறித்து, கொல்லம் மாவட்டம் பதனாபுரத்தில் உள்ள காந்தி பவனில் முதிய ஆண்களுக்காக ரூ.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன தங்குமிடத்தைத் திறந்து வைத்துப் பேசியபோது முதலமைச்சர் விளக்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசு ஆட்சிக்கு வந்ததும் எடுத்த முதல் முடிவு, மூத்த குடிமக்களுக்காகத் தனித்துறையை உருவாக்கியதுதான். நாட்டிலேயே முதன்முறையாக இத்தகைய துறை அமைக்கப்பட்டது.

முதியோருக்குப் பல்வேறு உரிமைகளை வழங்கும் வகையில், உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு சட்டத்தையும் எனது அரசு நிறைவேற்றியுள்ளது. பெற்றோரின் சொத்துகள் அனைத்தையும் பெற்றுக்கொண்ட பிறகு அவர்களைப் புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் பிரிவை இந்தச் சட்டத்தில் நான் வேண்டுமென்றே சேர்த்துள்ளேன். எனவே, யாரும் கவலைப்பட வேண்டாம்” என்றார்.

இந்தச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்து நடைமுறைக்கு வந்தவுடன், பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுக்கொண்டு அவர்களைக் கைவிடுபவர்கள் நிச்சயமாகச் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், குழந்தைகளை வளர்ப்பதற்காகப் பெற்றோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு துன்பங்களைச் சந்திக்கிறார்கள் என்பதை எதிர்காலத் தலைமுறையினர் உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “குழந்தைகளை வளர்ப்பதற்காகப் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கும் தாய்மார்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், குழந்தைகள் வளர்ந்து பெரிய நிலையை அடைந்த பிறகு பெற்றோரைப் புறக்கணிக்கின்றனர். இது நடக்கக் கூடாது. கேரளத்தில் இத்தகைய கலாசாரம் இருக்கக் கூடாது. பெற்றோரை நம்முடன் அரவணைத்துப் பாதுகாக்கும் புதிய கலாசாரம் உருவாக வேண்டும்.

கேரளத்தில் எந்தவொரு முதியவரும் தனிமையில் விடப்படக் கூடாது என்பதே எனது மிகப்பெரிய கனவு” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.