“116 நாட்கள் முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருந்தாரா?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய சட்டமன்ற உறுப்பினர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினரைத் தாமதிக்காமல் கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளிப்பதற்காகக் காவல்துறை இயக்குநரைச் சந்திக்கத் தலைமை அலுவலகம் வந்தோம். டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தோம். ஆனால், டிஜிபி சிங்கப்பெண் படையின் பயிற்சிக்காகச் சென்றுள்ளதாகக் கூறினார்கள். நாங்கள் கேட்பது என்னவென்றால், எங்கே இருக்கிறது இந்தச் சிங்கப்பெண் படை? அப்படி என்ன பயிற்சி அளிக்கப்படுகிறது? அவர்களுக்கு என்னதான் வேலை?

எம்.எல்.ஏ. மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும் அவரைக் கைது செய்யாமல் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். 75 சதவீதத்திற்கும் மேல் ஆளுங்கட்சி நிர்வாகிகள்தான் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக, தவறான செயல்களிலும் பாலியல் வன்முறைகளிலும் ஈடுபடுகின்றனர். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை.

இந்த ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து ஆபாசச் செய்திகளை அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்திய வரலாற்றிலேயே இதுபோன்ற செயல்பாடுகள் நடந்ததில்லை. மது அருந்திவிட்டு மாவட்ட ஆட்சியர் வீட்டுக்குச் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். ஜூலை மாதம் இந்தப் பிரச்சினைகள் நடந்துள்ளன. மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளார். அதற்குத் தலைமைச் செயலாளர், நீங்கள் வேறு மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்துகொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

மாவட்ட ஆட்சியர் புகார் அளித்து 116 நாட்களாகியுள்ளன. இந்த 116 நாட்களும் சட்டம் ஒழுங்கைக் கையில் வைத்துக்கொண்டிருந்த முதலமைச்சர் விஜய் தூங்கிக்கொண்டிருந்தாரா? இந்த ஆபாசக் குறுஞ்செய்தி விவகாரத்தை முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது திமுகதான். குற்றத்தை மறைத்த தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தத் தலைமைச் செயலாளரைக் குற்றவாளியாகக் கருத வேண்டும். மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தது குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்தாரா? அல்லது தெரிவித்தும் முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் இருந்தாரா என்பது தெரிய வேண்டும்.

துணை சபாநாயகர் ரவிசங்கர், தனது வீட்டுக்கு மனு கொடுக்க வந்தவரைத் தகாத முறையில் துன்புறுத்தியுள்ளார். துணை சபாநாயகர் பிரச்சினை முடிந்து இரண்டு வாரங்கள் ஆகின்றன. அதற்கும் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. துணை சபாநாயகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் மனுவில் குறிப்பிட்டோம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தத் தூங்கு மூஞ்சி முதலமைச்சர் எழுந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை சபாநாயகரைக் கைது செய்ய வேண்டும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.