”மதத்தை, ஜாதியை வைத்து கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை வீழ்த்த நினைக்கின்றனர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மதத்தை வைத்து, ஜாதியை வைத்து கலவரத்தை ஏற்படுத்தி, ஆட்சியை வீழ்த்திவிடலாம் என்று சிலர் முற்படுகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் மஹாலில் மாற்று கட்சியினர்…

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மதத்தை வைத்து, ஜாதியை வைத்து கலவரத்தை ஏற்படுத்தி, ஆட்சியை வீழ்த்திவிடலாம் என்று சிலர் முற்படுகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் மஹாலில் மாற்று கட்சியினர் 10,000 பேர் திமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, கோவை செல்வராஜ் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுகவை ஆட்சிக்காக அல்ல, தொழிலாளர்களுக்காக, தமிழ் சமூகத்துக்காக, இனத்துக்காக அண்ணா தொடங்கினார். நாட்டில் இன்று எத்தனையோ கட்சிகள் திடீர் திடீர் என்று முளைக்கின்றன. அப்படி உள்ள கட்சிகள் துவங்கிய அடுத்த நாளே, நாளைய முதல்வர், நாளை ஆட்சி நமது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் சில கட்சிகள் காணமால் போய்விட்டன.

இதையும் படியுங்கள் : என்எல்சி விவகாரத்தில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்; நியூஸ்7 தமிழ் வியூகம் நிகழ்ச்சியில் வேல்முருகன் பேட்டி

தமிழர் தன்மானத்தோடு வாழ வேண்டுமென்று எத்தனையோ திட்டங்களை அண்ணா துவக்கி வைத்தார். அதில் அவர் கொண்டு வந்த முக்கிய தீர்மானம் மூன்று. சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும், இருமொழி கொள்கை, தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது. இன்று தமிழர்கள் தன்மானத்தோடு வாழ்கிறோம் என்றால் அதற்கு இந்த மூன்றும் தான் காரணம்.

நெருக்கடி நிலையை எதிர்த்தால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று டெல்லியிருந்து தூது வந்த போது, ஆட்சி கவிழ்ந்தாலும் போராடுவோம் எனக் கூறி களத்தில் இறங்கி லட்சக்கணக்கான தமிழர்களோடு போராடியவர் கருணாநிதி. அப்போது ஆட்சியை பற்றி கவலைப்படாமல், மக்களுக்காக உழைத்தார்.

1989-ல் ஆட்சிக்கு வந்த போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதவராக இருக்கிறோம் என்று கூறி ஆட்சியை கலைத்தார்கள். இந்த நாட்டில் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாத கட்சி திமுக தான். இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு, அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். அதேபோல் சொல்லாததையும் செய்கிறோம்.

அதனால் தான் அண்மையில் நடந்த ஈரோடு இடைத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றோம். ஆனால் ஈரோடு கிழக்கில் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த முறை வெற்றி பெற்றோம். ஆனால் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 66,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். அதற்கு காரணம் மக்கள் நம்மீது வைத்த நம்பிக்கை. அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முழு வெற்றியை பெற தொடர்ந்து உழைப்போம்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மதத்தை வைத்து, ஜாதியை வைத்து கலவரத்தை ஏற்படுத்தி, ஆட்சியை வீழ்த்திவிடலாம் என்று சிலர் முற்படுகிறார்கள். அதற்கெல்லாம் செவி சாய்க்காமல், நமது இலக்கு நாடாளுமன்ற தேர்தல் என்று எண்ணி அதற்காக உழைப்போம். நாடும் நமதே, நாளையும் நமதே.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தை இழந்தோம். இந்த முறை அதையும் இழக்காமல் 40/40 என்று எண்ணி வெற்றிக்கு பாடுபடுவோம். ஏதோ தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிக்காக மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் வெற்றிக்காக முழுமையாக ஈடுபட இருக்கிறோம். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.