மத்திய பாஜக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் இடஒதுக்கீடு நிறைவேற 50 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் பாஜக அதனை நிறைவேற்றாது என மகளிர் உரிமை மாநாட்டில் திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் கலைஞர் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி முதல் அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்து வருகிறார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கலந்து கொண்டனர்.
மேலும் இம்மாநாட்டில் தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் கனிமொழி எம்.பி., பேசியதாவது:
“பெண்களை நாங்கள் போற்றுகிறோம் பெண் சக்திகளை நாங்கள் மதிக்கிறோம் என்று பொய்களை பேசுபவர் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய பாஜக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் இடஒதுக்கீடு நிறைவேற 50 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் பாஜக அதனை நிறைவேற்றாது. பாஜக கூட்டணி அமைத்துள்ள புதுச்சேரியில் பட்டியலின பெண் என்பதால் அமைச்சரே ராஜிநாமா செய்யும் நிலை உள்ளது. பழங்குடியின பெண் என்பதால் குடியரசுத் தலைவரும் பல இடங்களில் அவமதிக்கப்படுகிறார்.
பெண்கள் ஒதுக்கப்படுகிறார்கள், நாங்கள் யாசகம் கேட்கவில்லை, உரிமைக்காக போராடுகிறோம். யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. திமுக அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு காவல் துறையில் இடமளிக்கப்பட்டது. கருணாநிதி இதனை சாத்தியப்படுத்தினார்.
ஆட்சியில் அரியணை ஏறிய உடனே பெண்களுக்காக இலவச பேருந்து பயணம் அறிவித்தவர் ஸ்டாலின். எங்கள் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை கழக நிதியை மகளிரின் உதவித்தொகை என் கூறாமல் மகளிரின் உரிமை தொகை என்று வழங்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின். பெண்களின் முன்னேற்றத்திற்கு படியாக 11 பெண் மேயர்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு.
பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக நாட்டில் 15 சதவீதம் பெண்கள் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்பொழுது அது 8 சதவீதமாக குறைந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை, கல்வி இல்லை, சுதந்திரம் இல்லை இப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் இந்த பிஜேபி அரசு” இவ்வாறு பேசினார்.







