விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்
”திருச்சி தஞ்சை சாலையில் துவாக்குடியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கட்சி சார்பற்ற அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றமும் அந்த சாலையில் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என கூறி உள்ளது. ஆனாலும் பணி கிடப்பில் உள்ளது. உயர் நீதிமன்றத்தின் ஆணையின் அடிப்படையில் தமிழக அரசு இந்திய ஒன்றிய அரசும் சர்வீஸ் சாலை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு என்பது ஒட்டுமொத்தமாக மக்களின் கோரிக்கை. இந்தியா முழுவதும் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மதுக்கடைகளை அடுத்தடுத்து படிப்படியாக குறைத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். அது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது மறுபடியும் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த கோரிக்கையை நினைவூட்டுகிறேன். மது மற்றும் போதை பொருள்களை கட்டுப்படுத்துவதற்கு, ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முன்வர வேண்டும்.
திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. திமுக கூட்டணி கட்டுக்கொப்பாக உள்ளது. காங்கிரஸின் கோரிக்கை பேச்சுவார்த்தையில் முடிவாகும். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தை பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது. தமிழக அரசியலுக்கு அது பொருந்தாது என முதல்வர் தெரிவித்திருக்கிறார். எப்படி பொருந்தாது என்பதை விளக்குவார். எங்களைப் போலவே காங்கிரஸும் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று கிடையாது.
நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம். இந்த கூட்டணி உருவானதில் எங்கள் பங்கும் இருக்கிறது. இந்த இடத்தில் இடம் கிடைக்கும் என வெளியிட வேண்டி அவசியமில்லை. திமுக கூட்டணியில் பிரச்சனை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.







