“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற அவசியம் இல்லை” – நடிகர் அட்டகத்தி தினேஷ் பேட்டி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற அவசியம் இல்லை எனவும், தமிழக காவல்துறையினர் வழக்கை நல்ல முறையில் விசாரணை மேற்கொள்வார்கள் எனவும் நடிகர் அட்டகத்தி தினேஷ் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற அவசியம் இல்லை எனவும், தமிழக காவல்துறையினர் வழக்கை நல்ல முறையில் விசாரணை மேற்கொள்வார்கள் எனவும் நடிகர் அட்டகத்தி தினேஷ் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் விசாரணையை தொடங்கிய போலீசார் பிரபல ரவுடியாக இருந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் இந்த கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் நேற்று (ஜூலை 20) நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள ரமடா ஓட்டல் அருகே தொடங்கிய இந்தப் பேரணி ராஜரத்தினம் ஸ்டேடியம் சாலையில் நிறைவடைந்தது.  இந்த பேரணியில் அரசியல் கட்சி தொண்டர்கள், அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் நடிகர் அட்டகத்தி தினேஷ் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அட்டகத்தி தினேஷ், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பொறுத்தவரை அரசு மற்றும் காவல்துறையால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் பொது மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என அவசியம் இல்லை. தமிழ்நாடு காவல்துறையினர் சிறப்பான முறையில் பணியை மேற்கொள்வார்கள். அவர்கள் இந்த வழக்கை நன்றாக விசாரித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

பின்னர் ஜான் பாண்டியன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளாரே என்கிற அடிப்படையில் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு தமிழ்நாடு அரசு உரிய  நடவடிக்கை எடுக்கும் என நடிகர் அட்டகத்தி தினேஷ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.