தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு!

தன் பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தன் பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல்…

தன் பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தன் பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. முதலில் தீர்பளித்த தலைமை நீதிபதி, சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது என்றும் அதே நேரத்தில் சட்டத்தின் சரத்துகளை கையாள முடியும் என்றும் தெரிவித்தார். திருமணம் தொடர்பான விவகாரத்தில் ஒரு புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

சிறப்பு திருமணச் சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை நாம் இழக்க நேரிடும் என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, அதே நேரத்தில் சிறப்பு திருமண சட்டத்தில் தன்பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றம் தானாக முன்வந்து சேர்க்க முடியாது என்றும் கூறினார். எனவே சிறப்புத் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். 

நீதிபதி எஸ்.கே.கவுல்

தலைமை நீதிபதிக்கு பிறகு நீதிபதி எஸ்.கே.கவுல் தீர்ப்பளித்தார். அப்போது அவர் தன் பாலினத்தனவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சரி செய்ய இதுவே சரியான தருணம் என்று கூறினார். தற்போதுள்ள சட்டங்கள் ஆங்காங்கே தனித்தனியாக உள்ளன என்று கூறிய நீதிபதி எஸ்.கே.கவுல், புதிதாக உருவாக்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த சட்டம் பாகுபாடு பாலின அடையாளங்கள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை கையாளும் வகையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

தன் பாலின திருமணங்களை அங்கீகரிப்பது என்பது ஒரு முன்னோக்கிய நகர்வு என்று கூறிய நீதிபதி எஸ்.கே.கவுல், தன் பாலின தம்பதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நீதிபதி ரவீந்திரா பட்

அடுத்ததாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவீந்திர பட், தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் கூறிய வழிகாட்டு நெறிமுறைகளில் இருந்தும் மாறுபடுவதாக தெரிவித்தார். தன்பாலின திருமணம் தொடர்பான சட்டம் இல்லாமல் அதனை அங்கீகரிக்க முடியாது என்றும்
தன்பாலின திருமணம் அங்கீகாரம் தொடர்பான சட்டதை நாடாளுமன்றம் தான் இயற்ற முடியும் என்றும் அதனை நீதிமன்றத்தின் மூலம் கட்டாயப்படுத்த முடியாது என்றும் நீதிபதி ரவீந்திரா பட் கூறினார்.

நீதிபதி நரசிம்மா & நீதிபதி ஹீமா கோலி

இதேபோல நீதிபதி பிஎஸ் நரசிம்மா, நீதிபதி ஹீமா கோலி ஆகியோரும் தன் பாலின திருமண சட்ட அங்கீகாரத்துக்கு எதிராக தீர்ப்பு அளித்தனர். 5 நீதிபதிகளில் மூன்று பேர் தன் பாலின திருமணங்களுக்கு எதிராக தீர்ப்பளித்தனர். இதையடுத்து இவ்வழக்கில் இறுதி தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், மாறுபட்ட தீர்ப்புக்களின் அடிப்படையில் தன் பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று கூறினார்.

அதே நேரத்தில் தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாக மத்திய அரசு உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.