புதுச்சேரியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், கடந்த 11ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 100 மையங்களில் தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடமாடும் தடுப்பூசி வாகனங்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ஆளுநர் மாளிகை வாயிலில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுபடுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக கூறினார். மேலும், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். புதுச்சேரியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், பொதுமக்கள், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றவில்லையென்றால், பகுதி நேர அடைப்புகள் குறித்து சிந்திக்க வேண்டிவரும் என்றும் கூறினார்.







