விருகம்பாக்கத்தில் நடிகர் விவேக்கின் இல்லத்தில் அவரது உடலுக்கு திரைத்துறைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவுக்கு திரைத்துறைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளமான ட்விட்டரிலும் நேரிலும் தங்களை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலைியில் சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விவேக்கின் இல்லத்தில் வைக்கப்படிருக்கும் அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, நாசர், நகைச்சுவை நடிகர்கள் மயில்சாமி, கவுண்டமணி, போண்டா மணி, யோகி பாபு, சூரி, எம்.எஸ். பாஸ்கர், சார்லி, இயக்குநர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் நேரில் சென்று விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் விவேக் மரணம் குறித்து திரைப் பிரபலங்கள் பேசியதாவது,
நடிகர் நாசர்
“அவரை இழந்து நாம் தவிப்பதைப்போல் பல லட்ச மரங்கள் அவர் இல்லாமல் தவிக்கப்போகிறது.”
நடிகர் மயில்சாமி
“திடீர் என்று இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் மனவேதனையை அளிக்கிறது. ஊர் ஊராகச் சென்று மரங்கள் நட்டு வந்தார். யாருக்கு உதவி என்றாலும் முதலில் என்னிடம் சொல்லுங்கள் என்று கூறுவார்.”
நடிகர் பார்த்திபன்
“அவரது மகன் மரணத்தின் போது அவரின் துயரத்தை பகிர்ந்துக் கொண்டேன் ஆனால் ‘அவரின் மறைவால் ஏற்பட்ட சோகத்தை நான் யாரிடம் வெளிப்படுத்துவது? “
நடிகர் சத்தியராஜ் காணொலி வாயிலாக வெளியிட்ட பதிவில்,
“சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த எனது தம்பி விவேக் நம்மோடு இல்லாமல் போனதற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
நடிகர் ரமேஷ் கண்ணா
“இரவு முழுவதும் அவர் குணமடைய இறைவனிடம் வேண்டினேன். இன்று காலையில் அவரை சென்று பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.”
நடிகை கஸ்தூரி
“நடிகர் விவேக்கின் மரணம் அதிர்ச்சியாக இருக்கிறது. இது நடந்திருக்கக் கூடாது. என்னால் பேச முடிவில்லை.” நடிகை கஸ்தூரி
பாடலாசிரியர் வைரமுத்து
“ஒரு கலைஞனுக்கு தேவையான சமூக அக்கறையை அவர் தனது கலை வழியிலும் கலைக்கு வெளியிலும் நடிகர் விவேக் பின்பற்றினார் அதுவே அவரது தனிச்சிறப்பு.”







