குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை; தமிழக டிஜிபி சைலேந்திர பாபு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை என விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக மத்திய…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை என விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் விபத்து நிகழ்ந்த நஞ்சப்பசத்திரம் பகுதியில் மத்திய அரசு சார்பில் விசாரணை அதிகாரி ஏர் மார்ஸல் மன்வேந்திர சிங் ஆய்வு மேற்கொண்டார்.

ஹெலிகாப்டருக்கும், ஹெலிகாப்டர் மோதிய மரத்திற்கும் இடையே உள்ள பகுதி ஹெலிகாப்டர் மோதிய மரத்தின் உயரம் மற்றும் அதன் தன்மை ஆகியவை குறித்தும் அளவீடு செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இது தவிர விமானப் படையில் இருந்து வந்த உயர் தொழில் நுட்பக் குழுவினரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

https://twitter.com/news7tamil/status/1469199275640819712

இதேபோல், ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த குன்னூர், நஞ்சப்ப சத்திரம் பகுதியில் தமிழ்நாடு அரசு சார்பில் ஏடிஎஸ்பி முத்துமாணிக்கம் குழுவினர் 26 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும், விபத்து நிகழ்ந்த பகுதி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆர்.டி.ஓ, வனத்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர். இதுதவிர அண்ணா பல்கலைக் கழக தொழில் நுட்பக் குழுவானது 3டி மேப்பிங் முறையில் அதிநவீன ட்ரோன் மூலமாக ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, விபத்து நடந்த பகுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் வரை ட்ரோன் மூலம் காட்சிப் படுத்தினர். 5 ஆயிரம் அடிக்கு மேல் பறந்திருக்க வேண்டிய ஹெலிகாப்டர் குறைவான உயரத்தில் பறந்ததன் காரணம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே விபத்து நிகழ்ந்த குன்னூர், நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காவல்துறையினரின் விசாரணை குறித்து இராணுவத்திடம் பகிரப்படும் எனவும் ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.