ஆஷஸ் டெஸ்ட் தொடரில், இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி நிலைத்து நின்று ஆடி வருகிறது.
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடக்கும் இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50.1 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 39 ரன்களும் ஓலி போப் 35 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பிறகு மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை நேற்று தொடங்கியது. டேவிட் வார்னரும், மார்கஸ் ஹாரிசும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஹாரிஸ் (3 ரன்) ராபின்சனின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து மார்னஸ் லபுஸ்சாக்னே, வார்னருடன் இணைந்தார். வார்னர் 17 ரன்னில் இருந்த போது, பென் ஸ்டோக்சின் பந்துவீச்சில் போல்டு ஆனார். ஆனால் நோ-பால் என்பதால் தப்பித்தார்.
மூன்று முறை அவுட் கண்டத்தில் இருந்து தப்பித்த வார்னர், 94 ரன்னில் ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மிடில் வரிசையில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடினார். அவர் 85 பந்துகளில் தனது 3-வது சதத்தை நிறைவு செய்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 84 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் எடுத்த நிலையில், 3- வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அந்த அணி, 425 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து 278 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கியது. ஹசீப் ஹமீதும் ரோரி பர்ன்ஸும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். ஹசீப் (27) விக்கெட்டை ஸ்டார்க்கும் பர்ன்ஸ் விக்கெட்டை, கம்மின்ஸும் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய டேவிட் மலானும் கேப்டன் ஜோ ரூட்டும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்றைய ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. நான்காவது நாள் ஆட்டம் நாளை தொடங்குகிறது.