கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல், பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளைக்குள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை என்று தெரிவித்துள்ளது. மேலும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் மிதமான மழையும், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.