’விமானப்படை அதிகாரிகளின் உடல்கள் அறிவியல்பூர்வமாக அடையாளம் காணப்படும்’

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை அதிகாரிகளின் உடல்கள் அறிவியல்பூர்வமாக அடையாளம் காணப்படும் என ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத்…

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை அதிகாரிகளின் உடல்கள் அறிவியல்பூர்வமாக அடையாளம் காணப்படும் என ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த 13 பேரின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்பட்டு, பாலம் விமானப்படை தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பிரதமர் மோடி, பிபின் ராவத்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்தும், மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உடல்கள் அடங்கிய பெட்டிகளுக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், பிபின் ராவத்தின் மகள்கள் மற்றும் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரில் 9 உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. எஞ்சியவர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் மூலம் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் அடையாளம் காட்டினாலும், அதனை உறுதிப் படுத்த அறிவியல்பூர்வமாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். முழுமையாக உறுதிபடுத்தப்பட்ட பின்னரே, உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டடும் எனவும், அதன் பிறகு, உரிய ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.