தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமாக கமலாலயத்திற்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்றார். அங்கு பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் குறித்து அமித்ஷா தலைமையில் பாஜக மையக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டி ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
அப்போது, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிய அமித் ஷா, “முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மறைவால் தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்தி பாஜக பயன்பெற வேண்டும். கடுமையாக உழைத்தால் தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமைக்கும்” என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக தமிழ்நாட்டில் 10 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றுவது, தேர்தலுக்கான வியூகங்கள் எப்படி இருக்க வேண்டும் என உள்ளிட்டவற்றை குறித்து ஆலோசனை வழங்கியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.







