10 சதவிகித இடஒதுக்கீட்டை அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை, நிராகரிக்கிறது என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன், “எந்த கட்சிகளிலும் முரண்பாடு இல்லை. சமூகநீதி பிரச்னையில் எல்லோரும் ஒற்றுமையாக, அவரவர் கட்சிகளில் இருந்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டில் இதை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியதுதான் மிக முக்கிய கருத்து.
இந்திய அரசு அதன் துறைகளில், அவர்களின் விருப்பப்படி 10 சதவிகித இடஒதுக்கீடு போன்றவற்றை செய்து கொள்ளட்டும். பாஜகவை பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களுக்காக உள்ள இடஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக முடித்து வைக்க வேண்டும் என்பதே அவர்களின் நிலை. அதற்கான தொடக்கம் தான் இது.
எல்லா மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு தான் முன்னுதாரணமாக இருக்கிறது. அதேபோல் இதிலும் முன்னுதாரணமாக இருக்கும். சமூகநீதியை காப்பதில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் கட்சி மற்றும் எல்லா கட்சிகளின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 10 சதவிகித இடஒதுக்கீட்டை அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை, நிராகரிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.