2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தல் குறித்து பாஜக மாநில தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தனியார் நிகழ்ச்சி மற்றும் பாஜக கட்சி நிகழ்வில் கலந்து கொள்ள ஒருநாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-ம் ஆண்டு விழாவில் உள்துறை அமித்ஷா கலந்து கொண்டார்.
இந்த ஆண்டுவிழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பாஜக மாநில தலைமை அலுவலகமாக கமலாலயத்திற்கு சென்றார். அங்கு பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பாஜக அலுவலகத்திற்கு அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர் 2024ம் ஆண்டு வரவிருக்கும் மக்களவை தேர்தல் குறித்து அமித்ஷா தலைமையில் பாஜக மையக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, உள்ளிட்ட 84 முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், மக்களவை தேர்தல் வியூகம் குறித்தும், அதிமுக கூட்டணியில் பாஜக எத்தனை இடங்களை கேட்டு பெற வேண்டும் என்றும், தமிழகத்தில் எத்தனை இடங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம், மற்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கூட்டம் சுமார் 1.30 மணி நேரம் நடைப்பெற்றது.
ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர், கமலாலயத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் செல்லும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய விமானப்படை விமானம் மூலம் 4 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார்.







