தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் மக்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு தீய சக்தி; அந்தத் தீய சக்தியை இந்த மண்ணிலிருந்து அகற்றுவதற்காகவே அதிமுக உருவாக்கப்பட்டது. திமுகவை தமிழ்நாட்டிலிருந்து வேரோடு அகற்ற வேண்டும் என்பதே அதிமுகவின் லட்சியம். அரசு விழாவில் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுகிறார். ஆனால், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அகற்றப்படுவதற்கு இன்னும் மூன்றே அமாவாசைகள் தான் மிச்சமுள்ளன.
அதிமுக ஆட்சிக் காலத்தில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் 95 விழுக்காட்டை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். ஆனால், இன்றைய திமுக அரசு வெறும் 5 விழுக்காடு வாக்குறுதிகளைக் கூடச் சரிவர நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது.
100 நாள் வேலைத் திட்டம் தற்போது 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுகவின் கோரிக்கையை ஏற்றுத்தான், மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால், இந்த வேலை நாட்கள் 150-ஆக உயர்த்தப்படும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், அவர்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிபவர்களுக்குச் சம்பளம் உயர்த்தப்படும் என ஸ்டாலின் கூறினார். ஆனால், இதுவரை உயர்த்தப்படவில்லை.
கொரோனா பேரிடர் காலத்தில், வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்த 8 கோடி மக்களும் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் உருவானது. அந்த ஓராண்டு காலமும் அரசுக்கு எந்தவித வருமானமும் இல்லை. இருப்பினும், சிறப்பான ஆட்சியைத் தந்த அரசு அதிமுக.
கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு விலையில்லா சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. அத்துடன் மக்களுக்குத் தேவையான நிதி உதவியும் அளிக்கப்பட்டது. குறிப்பாக, அந்த சமயத்தில் வந்த தைப் பொங்கலின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹2,500 வழங்கினோம். அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் ஸ்டாலின், ₹5,000 வழங்க வேண்டும் என்று கோரினார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்த தைப் பொங்கலின் போது ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. திமுக ஆட்சிக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. இனியாவது மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு, அவர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தைப் பொங்கலுக்கு ₹5,000 வழங்க வேண்டும். அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை; எனவே, ஆட்சியில் இருந்து செல்லும் போதாவது மக்களுக்கு ₹5,000 வழங்கி அவர்கள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டன. இதனால் அரசுக்கு வருமானம் அதிகரித்துவிட்ட போதிலும், அவர்கள் நம் அனைவரையும் கடனாளிகளாக ஆக்கிவிட்டார்கள். இந்தியாவில் கடன் வாங்குவதில் தமிழ்நாடு இன்று முதலிடத்தில் இருக்கிறது.
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் வாங்கினால், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட 10 ரூபாய் கூடுதலாகக் கொடுக்க வேண்டியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், இந்த ‘பத்து ரூபாய் பாட்டில் விவகாரம்’ குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். அதேபோல், உள்ளாட்சித் துறையில் பணியாளர் நியமனம் செய்ததில் 800 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை (ED) விசாரணை மேற்கொண்டு, முறைகேடு நடந்துள்ளதை உறுதிப்படுத்தி தமிழக அரசுக்கு இரண்டு முறை அறிக்கை அனுப்பியுள்ளது. இருந்தபோதிலும், திமுக அரசு இதுவரை எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஊழல்கள் குறித்து வழக்குத் தொடரப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”
2019 வரை அதிமுக அரசு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி உள்ளது. முதலமைச்சர் லேப்டாப் வழங்கப்போவதாக தந்திரமாக பேசி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மக்கள் நம்ப வேண்டாம். உங்களுடன் ஸ்டாலின் திட்ட மூலம் ஏதாவது பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது . திமுகவில் உறுப்பினர்கள் சேர்க்க ஓர் அணியில் தமிழ்நாடு என ஒவ்வொரு வீடாக சென்று மக்களிடம் கெஞ்சும் நிலை ஏற்பட்டுவிட்டது. மக்கள் திமுகவை நிராகரித்து விட்டார்கள்” என்றார்.







