எம்.ஜி.ஆர் குறித்த சர்ச்சை பேச்சு – மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்ட தெலுங்கு நடிகர்….!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.யார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் மன்னிப்பு கோரியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் ராஜேந்திர பிரசாத். அண்மையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் மறைந்த நடிகர் காந்தா ராவ் அவர்களை பற்றி புகழ்ந்து பேசினார். அவர் பேசுகையில் காந்தா ராவ் திரைப்படங்களில் கத்தி சண்டை போடுவதில் வல்லவர் என்றும் அவரின் திறமையை பார்த்து, எம்.ஜி.ஆர் கூட பயந்து நடுங்குவார் என்றும் கூறியிருந்தார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சித்திரமாகவும், தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்தவர் எம்.ஜி.ஆர். தமிழ் நாட்டு மக்களும், நடிகர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு பெரும் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர் குறித்த ராஜேந்திர பிராசத்தின் பேச்சு சர்ச்சையை கிளப்பியது. தென்னிந்திய நடிகர் சங்கம் தனது கண்டனத்தை பதிவு செய்தது. மேலும் பல்வேறு தரப்பினரும் ராஜேந்திர பிரசாத் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் நடிகர் ராஜேந்திர பிரசாத் இந்த சர்ச்சை தொடர்பாக மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

நான் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத். இரண்டு நாட்களுக்கு முன்னர் இங்கு ஒரு விழா நடைபெற்றது. அதில் மூத்த நடிகர் காந்தா ராவ் விருது எனக்கு அளித்தார்கள். அந்த நிகழ்ச்சியில் நான் பேசுகையில், தமிழ் சினிமாவின் கடவுளாக நான் பார்க்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் குறித்து விளையாட்டாக சொன்ன கருத்தை வேண்டும் என்றே பெரிதாக்கி விட்டார்கள்.

நான் முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்குறித்து அவதூறாக பேசுவேனா? அந்த அளவுக்கு எனக்கு தைரியம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? நான் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டியூட்டில் படிக்கும் போது நாங்கள் எப்படி நடிப்பு கற்றுக் கொள்கிறோம் என்று பார்க்க வந்தார். அப்போது அவர்தான் முதலமைச்சர். அவரை தவறாக விமர்சிக்கும் இடத்தில் நான் இல்லை. ஆனாலும் என்னை அறியாமல் வந்த வார்த்தைகளால் நீங்கள் யாராவது புண்பட்டிருந்தால், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இனி வாழ்க்கையில் எப்போதுமே நான் இதுபோல பேச மாட்டேன். இந்த தவறை நீங்கள் மன்னித்துக் கொள்ளுங்கள், இனிமேல் இதுபோல் நடக்காது என்று உறுதியாக கூறுகிறேன். இத்துடன் இந்த பிரச்னையை விட்டுவிடுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.