தேனி அருகே பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சிறுமியின் தந்தையை பேரூராட்சி தலைவர் கடத்தி சென்று பேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்த 8 வயது சிறுமி ஹாசினி ராணி இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில், மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாமல் வைத்திருந்ததே சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் பேரூராட்சியின் நிர்வாக அலட்சியத்தை மறைப்பதற்காக சிறுமியின் உடலுக்கு அவசர அவசரமாக உடற்கூறாய்வு செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடைப்பட்டி பேரூராட்சி தலைவர் தனுஷ்கோடி சிறுமியின் உடலை விரைவாக நல்லடக்கம் செய்யுமாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, சிறுமியின் மரணம் மூடிமறைக்கப்பட்ட நிலையில், நியூஸ் 7 தமிழ் மூலமாக இந்த விவகாரம் வெளியில் கொண்டுவரப்பட்டது. நேரடியாக பேரூராட்சி தலைவரை நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் சந்தித்து விளக்கம் கேட்டபோது, தனது பதவியின்போது இந்த பணிகள் தொடங்கப்படவில்லை என அவர் மலுப்பலாக பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் பூதகரமாக வெடித்ததையடுத்து, மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதாக சிறுமியின் தந்தையை பேரூராட்சி தலைவர் அழைத்து சென்றுள்ளார். ஆனால் ஆட்சியர் அலுவலகத்தில் அவர் இல்லாததால் நீண்ட நேரமாக சிறுமியின் தந்தையை அங்கேயே வைத்திருந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து வேறு இடத்திற்கு சிறுமியின் தந்தையை அழைத்து சென்ற பேரூராட்சி தலைவர் தனுஷ்கோடி, சிறுமி உயிரிழப்பு விவகாரத்தை மூடி மறைக்க பேரம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் அங்கும் இங்குமாக அலைக்கழிப்பிற்கு பிறகே சிறுமியின் தந்தை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தார். மனுவை பெற்று கொண்ட ஆட்சியர் சம்மந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்ததாரர் மீது உள்ள குறைகளை மறைப்பதற்காகவும், ஒப்பந்ததாரரை இந்த விவகாரத்தில் இருந்து காப்பாற்றும் நடவடிக்கை நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு சிறுமி ஹாசினி உயிரிழப்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– இரா.நம்பிராஜன்









