மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் எம் பி பி எஸ், பி டி எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த தேர்வானது நாடு முழுவதும் ஜூலை 17ம் தேதி நடை பெற்றது. 497 நகரங்களில், 3,500 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. 17. 78 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி விடைக்குறிப்பு மற்றும் ஒ எம் ஆர் விடைத்தாள்கள் வெளியான நிலையில் தேர்வு முடிவுகள் இன்று (செப்டம்பர் 7-ம் தேதி) மாலை 6 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. neet.nta.nic.in என்ற இணையத்தில் மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தியிருந்தது.
இதனால் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிவிடும் என்று மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவில்லை. முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகுமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம் அல்லது தேதி குறித்து எந்த அறிவிப்பும் வராததால், மாணவர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.







