சிதம்பரத்தில் பிரபல பிரியாணி கடையில் விற்கப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிதம்பரம் வெள்ளப்பிறந்தான் கோவில் தெருவில் பிரபல பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கீழ் அனுப்பம்பட்டு பகுதி சேர்ந்த சந்திரசேகர் என்பவர் ஒரு மட்டன் பிரியாணி 250 ரூபாய் என 7 மட்டன் பிரியாணி வாங்கியுள்ளார், இதில் நான்கு மட்டன் பிரியாணி பூம்புகாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மீதமுள்ள மூன்று பிரியாணிகளை வீட்டில் குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பிரியாணியில் பெரிய அளவு புழு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பிரியாணி வாங்கிய கடையில் கேட்டுள்ளார். அதற்கு கடையில் அவரை தரக்குறைவாக பேசி வெளியே செல்லுமாறும் இரவு 7 மணிக்கு மேல் வந்து பேச வேண்டுமென தெரிவித்து அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டும் அவர், குழந்தைகள் சாப்பிட்டு இருந்தால் என்ன ஆகும் என வேதனை தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்புத் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு தவறுகள் நடக்கும் முன் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் சந்திரசேகர், தற்போதைய குற்றச்சாட்டு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.







