தமிழ்நாடு, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடைக்குள் ஊழியர்கள் சிலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கர்நாடக மாநிலம் அத்திப்பளியில் பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு மற்றும் கர்நாடகவை சேர்ந்தவர்கள் பட்டாசு வாங்குவது வழக்கம். அந்த வகையில் தீபாவளிக்கு நெருங்கியுள்ள நிலையில் அத்திப்பள்ளி அருகே நவீன் என்பவருக்கு சொந்தமான கடையில் பட்டாசுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திடீரென நவீன் என்பவரின் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில், தீ மேலும் பரவி அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது.
இதனால் 5 கடைகள் கொழுந்துவிட்டு எரிந்தது. சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீ மளமளவென எரியத்தொடங்கியது. இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளது இதுவரை உருவாகியுள்ளது. மேலும் கடையில் இருந்த ரூபாய் 1.50 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளன. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் ஊழியர்கள் சிலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. மேலும் ஓசுர்- பெங்களூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகம், கர்நாடக போலீசார் இணைந்து போக்குவரத்து ஒழுங்குபடுத்தினர். பட்டாசு கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிள்கள், வேன் மற்றும் சரக்கு லாரிகள் தீயில் கருகி நாசமாகின.







