தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக காங்கிரஸ், விசிக, சிபிஐ , சிபிஎம், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவினால் பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து தவெக கட்சியின் தலைவர் விஜய் கடந்த 10 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் தனது ஆட்சி மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல், அதிமுக எஸ்.பி. வேலுமணி தரப்பு ஆகியோர் ஆதரித்தனர். திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து கருத்து தெரிவித்தனர்.
மேலும் திமுக எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்தனர். இதனை தொடர்ந்து தவெக அரசின் நம்பிக்கை தீர்மானம் மீது சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் வாக்கெடுப்பை நடத்தினார். இதில் நம்பிக்கை தீர்மானத்தை ஆதரித்து 144 பேரும் எதிர்ப்பு தெரிவித்து 22 பேரும் வாக்களித்தனர். 5 எம்.எல்.ஏக்கள் நடுநிலை வகித்தனர். இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தது. பெரும்பானமையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தது.
இது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் உதயந்தி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம். தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை. மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், ‘sofa’ அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







