சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில், “வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (04-07-2026) காலை 05.30 மணி அளவில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா – மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, 08.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 3 நாள்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஸ்கர் பகுதிகளை அடையக்கூடும்.
இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் இன்று கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், ஆகிய 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




