ஒத்தக்கடை ஊராட்சியில், பணியை முறையாக செய்யத் தவறிய அலுவலர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பொன். கார்த்திக்கேயன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஒத்தக்கடை கோதண்டராமசாமி கோயிலுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில், சில்வர் பட்டறை கழிவுகள், கோழி மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. எனவே, கோயில் நிலத்தில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஆணையர் சிவக்குமார் தரப்பில் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சம்பந்தப்பட்ட நிலத்தில் கோழி கழிவுகள், ரசாயன கழிவுகள் மற்றும் சில்வர் பட்டறை கழிவுகள் உள்ளது எனவும், ஊராட்சியின் குப்பை வண்டிகள் அங்குதான் நிறுத்தப்படுகிறது எனவும், பொதுப் பணித்துறை கால்வாயில் கழிவுகள் கொட்டப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : கொங்கு மண்டலத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்த திமுக
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒத்தக்கடை ஊராட்சியில் தனது பணியை முறையாக செய்யத் தவறிய அலுவலர்கள் மீது பஞ்சாயத்து சட்டப்படி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுகுறித்து எஸ்.பி மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அறநிலையத்துறை தரப்பில் சேதமடைந்த வேலியை சீரமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
– அனகா காளமேகன்







