முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

கொங்கு மண்டலத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்த திமுக


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற எண்ணத்தை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையடுத்து மீண்டும் ஒரு  முறை தகர்த்துள்ளது திமுக. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்றுத் தந்துள்ளது திமுக. 

தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள கோவை,  திருப்பூர், நீலகிரி, கரூர், திண்டுக்கல்,  நாமக்கல், சேலம், ஈரோடு,  கிருஷ்ணகிரி,  தருமபுரி ஆகிய 10  மாவட்டங்கள் கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படுவதுண்டு. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 68 தொகுதிகள் அதாவது 29 சதவீத தொகுதிகள் இந்த கொங்கு மண்டலத்தில்தான் உள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒவ்வொருமுறையும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் வரும்போதெல்லாம், மேற்கு மண்டலத்திலிருந்து கணிசமான தொகுதிகள் கிடைத்துவிடும் என அதிமுக நம்பும் அளவிற்கு அக்கட்சிக்கு அங்கு செல்வாக்கு இருந்துவந்திருக்கிறது, எம்.ஜி.ஆர் ஏற்படுத்திக்கொடுத்த இந்த செல்வாக்கை ஜெயலலிதாவும் தனது காலத்தில் தக்க வைத்தார். அதிமுக கோட்டையை  பிடிக்க இந்த கொங்கு மண்டலம் பல தேர்தல்களில் உதவியிருக்கிறது. குறிப்பாக கடந்த 2016ம் சட்டப்பேரவை தேர்தலில் வென்று அதிமுக தொடர்ச்சியாக 2வது முறையாக அரியணை ஏறுவதற்கு இந்த கொங்கு மண்டலத்தில் அதிக அளவில் அக்கட்சி தொகுதிகளை கைப்பற்றியது முக்கிய காரணமாக அமைந்தது. அந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது.

இப்படி கொங்கு மண்டலம்  தேர்தல்களில் அதிமுகவிற்கு அதிக தொகுதிகளை கொடுத்ததால்  அதனை தங்கள் கட்சியின் கோட்டை என அதிமுகவினர் பெருமிதம் கொள்வதுண்டு. ஆனால் அந்த எண்ணத்தை திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் படிப்படியாக தகர்த்து வருகிறார் மு.க.ஸ்டாலின். கடந்த  2019ம் ஆண்டு  நாடாளுமன்ற  தேர்தலில் தமிழகதில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றிகிடைத்தது. குறிப்பாக அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட கொங்கு மண்டலத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக  கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். கொங்கு மண்டலத்தில் உள்ள 11 மக்களவை தொகுதிகளில் 5 தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்திலும், 3 தொகுதிகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்திலும், 2 தொகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்திலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். திண்டுக்கல் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் பி.வேலுச்சாமி தமிழ்நாட்டிலேயே அதிகமாக 5,38,972 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அடுத்ததாக வந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 68 தொகுதிகளில் அதிமுக 44 தொகுதிகளை கைப்பற்றியது. குறிப்பாக கோவை, சேலம், தருமபுரி ஆகிய 3 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் 25 இடங்களில் இரட்டை இலை வென்றது.கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5  தொகுதிகள் முழுமையாக அதிமுக வசம் வந்தன. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக வென்றது. கொங்கு மண்டலத்தில்  24 இடங்களையே திமுக கூட்டணி கைப்பற்றியது. தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றிய திமுகவிற்கு இது ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தாலும், கடந்த 2011, 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தொகுதிகளில் பெற்ற இடங்களை ஒப்பிடும்போது இந்த முறை அதிக இடங்களில் திமுக கூட்டணி வென்றிருந்தது அக்கட்சியினருக்கு ஆறுதல் அளித்தது. 2021 சட்டம்ன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி44 இடங்களைக் கைப்பற்றியதால் அந்த மண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற தோற்றம் மீண்டும் கட்டமைக்கப்பட்டது.

அந்த பிம்பத்தை அடுத்த ஒருவருடத்திற்குள்ளாகவே தகர்த்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கொங்குமண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அரசியல் ரீதியில் அவர் வகுத்த வியூகங்களுக்கும், அப்பகுதிகளில் நிறைவேற்றிய மக்கள் நல திட்டங்களுக்கும் நல்ல பலன் கிடைத்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளை கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது திமுக.   அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட கொங்குமண்டலத்தை திமுக கைப்பற்றிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு குறிப்பிட்டார். ”எங்களுக்கு வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு ஓட்டுபோடாமல் விட்டுவிட்டோமே என எண்ணும் அளவிற்கு சிறப்பாக ஆட்சியை நடத்துவோம்” என சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பின்பு கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று ஆசிபெறச் சென்றபோது தாம் குறிப்பிட்டதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி செல்வாக்கு பெறுவதற்கு  கொங்கு மண்டலத்தில் அக்கட்சி பெற்ற வெற்றி ஒரு முக்கிய காரணமாக இருந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அவருக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. அவரது சொந்த மாவட்டமான சேலத்தில் சேலம் மாநகராட்சியைக்கூட  அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை.

இந்நிலையில்  தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் முதல் இடைத் தேர்தலாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் வந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் களம் இறங்கி வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா திடீரென கடந்த ஜனவரி 4ந்தேதி மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த பின் சந்திக்கும் முதல் இடைத் தேர்தல் அந்த ஆட்சியை மக்கள் எடைபோட்டு பார்க்கும் தேர்தல் என்பதாலும், அதுவும் அதிமுக பலம் வாய்ந்ததாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் தேர்தல் நடைபெறுவதாலும் இந்த முறை திமுகவே நேரடியாக களம் இறங்கும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை விட்டுத் தராது என்ற கருத்து நிலவியது. ஆனால் தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் திமுக ரிஸ்க் எடுப்பதாக கருதப்பபட்டது.

காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் 8 முனைப் போட்டியாக இருக்கும் என்று கருதப்பட்ட இந்த இடைத் தேர்தல்  களம் பல்வேறு அதிரடி திருப்பங்களுக்கு பினனர் 4 முனைப் போட்டியாக மாறியது. காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். அதிமுகவை பொறுத்தவரை இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற நெருக்கடி இரண்டு விதங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டது. கட்சியில் ஓபிஎஸ் உடனான அதிகாரப்போட்டியில் தமது செல்வாக்கை நிலைநாட்டவும், தமது மண்டலமான கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற பிம்பத்தை தக்கவைக்கவும் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வெற்றியை இபிஎஸ் பெரிதும் எதிர்பார்த்ததாக கூறப்பட்டது.

இதனால் கே.எஸ்.தென்னரசுவை வெற்றிபெற வைக்க தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுகவினர் தீவிர சுறுசுறுப்பு காட்டினர். அதே நேரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்க திமுகவினரும் தொகுதியில் தீவிரமாக களப்பணியாற்றினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முழுவீச்சில் பரப்புரையில் ஈடுபட்டார். தேமுதிக  வேட்பாளர் ஆனந்துக்காக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிற்கு 43,923 வாக்குகளே கிடைத்தன. கடந்த முறை இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் அந்த வெற்றி 8,904 வாக்குகள் வித்தியாசத்திலேயே கிடைத்தது. அப்போது அதிமுக கூட்டணி சார்பில் களம் இறங்கிய தமாகா வேட்பாளர் யுவராஜா 58,936 வாக்குகள் பெற்ற நிலையில், திருமகன் ஈவெரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நூழிலையில் கிடைத்த அந்த வெற்றி தற்போது பிரம்மாண்ட வெற்றியாக மாறியுள்ளது.

இந்த முறை திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவைவிட 66,233 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை காங்கிரசுக்கு 64.58 சதவீத வாக்குகளும், அதிமுகவிற்கு 25.75 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. இரண்டுக்கும் இடைப்பட்ட வித்தியாசம் 38.83% ஆகும். கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது வாக்கு  சதவீத வித்தியாசம் 5.86% ஆகவே  இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலைவிட கிட்டதட்ட 7 மடங்கு பெரிய வெற்றியை ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசுக்கு இந்த முறை பெற்றுத் தந்துள்ளது திமுக. அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட கொங்கு மண்டலத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்ததையும், ஆட்சிக்கு வந்த பின் நடைபெற்ற முதல் இடைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி வாகை சூடியதையும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாரடோனாவின் ரூ.20 லட்சம் மதிப்பு வாட்ச் திருட்டு: அசாம் இளைஞர் கைது செய்யப்பட்டது எப்படி?

EZHILARASAN D

வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

Vandhana

கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது உக்ரைன்

G SaravanaKumar