ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில் அன்றைய தினம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதற்கு மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 21,22,23 ஆகிய 3 நாட்கள் பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்றது. 24ஆம் தேதி நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் பதிலுரையுடன் கூட்டத்தொடர் நிறைவுபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் மானியக் கோரிக்கை கூட்டத்தொடர் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். வரும் ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றக் கூட்டம், பேரவை மண்டபத்தில் நடைபெறும் என்று கூறிய சபாநாயகர், மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் அன்றைய தினம் தொடங்கும் என்றார். வரும் 30 ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எந்தெந்த துறைகளுக்கு எப்போது மானிய கோரிக்கை என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும், நிதியமைச்சர் மீதான அதிமுகவின் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் அளித்தார். “எதிர்க்கட்சி துணைத் தலைவர் பேசும்போது என்னை பேசவிடுங்கள், அடுத்த நாள் நிதியமைச்சர் பதில் சொல்லுங்கள் என்றார், அந்த அடிப்படையில்தான் ஒன்றரை மணி நேரம் பேசினார் எனவும், நிதியமைச்சர் முக்கிய பணி காரணமாக என் கவனத்திற்கு தெரிவித்துவிட்டுதான் வெளியே சென்றார். முதலமைச்சரே அங்கு இருக்கும்போது குறைசொல்லி, அதிமுகவினர் வெளிநடப்பு செய்திருக்க வேண்டாம்” எனவும் அப்பாவு விளக்கினார்.