ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்கும்: ஜோ பைடன்

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுத்த நிலையில்,…

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுத்த நிலையில், ஒரு மாதமாக தாக்குதல் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல இடங்கள் ரஷ்யாவின் தாக்குதலால் நிலைகுலைந்தன. இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. போரை நிறுத்த வேண்டுமென பல்வேறு நாடுகள் ரஷ்யாவிடம் வலியுறுத்தின, சர்வதேச நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால், எதையும் கவனத்தில் கொள்ளாத ரஷ்யா, போரை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். ரஷ்யாவிற்கு சீனா வழங்கி வரும் உதவிகள் குறித்து, கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேரடியாக பேசியதாக குறிப்பிட்டுள்ள அதிபர் பைடன், ரஷ்யாவின் பொருளாதார எதிர்காலம் மேற்கத்திய நாடுகளுடன் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது என்பதை சீனா புரிந்து கொள்ளும் என குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.