என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிரான கடுமையான போராட்டம் தொடரும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உடன் நியூஸ் 7 தமிழின் உள்ளீட்டுப் பிரிவு ஆசிரியர் அன்சர் அலி, என்.எல்.சி விவகாரம் குறித்தும் பாமக நடத்தி வரும் போராட்டம் குறித்தும் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “பாமக சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். அதற்கு வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
எங்களது நோக்கம் மக்களை அவதிக்கு உள்ளாக்குவது இல்லை. விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் எங்களது நோக்கம். தற்போது தமிழ்நாடு முழுவதும் ஓரளவு என்.எல்.சி விவகாரம் குறித்து பேசப்படுகிறது. எங்களுடைய வருத்தம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை என்பதுதான். ஒருசில கட்சிகளுக்கு இது குறித்த புரிதல் இல்லை.
இதையும் படியுங்கள் : ”மதத்தை, ஜாதியை வைத்து கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை வீழ்த்த நினைக்கின்றனர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
என்.எல்.சி நிர்வாகம் 60 ஆண்டுகள் கடலூர் மாவட்டத்தில் இயங்கி, நிலத்தடி நீரை உறிஞ்சி, நிலக்கரியை எடுத்து, எரித்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் மாசுபடுத்தப்படுகிறது. என்.எல்.சி அங்கு வருவதற்கு முன் 8 அடியில் இருந்த நிலத்தடி நீரின் அளவு, இன்று 1000 அடிக்கு கீழ் சென்றுள்ளது. என்.எல்.சி-யால் 40,000 ஏக்கர் நிலம் பாலைவனமாக மாற்றப்பட்டுவிட்டது. இன்னும் 25000 ஏக்கர் நிலத்தை பாலைவனமாக மாற்ற திட்டமிட்டிருக்கிறார்கள்.
மத்திய அரசு 2025 ஆம் ஆண்டுக்குள் என்.எல்.சி நிர்வாகத்தை தனியாருக்கு விற்கப் போவதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்குள் தனியாருக்குச் சொந்தமாகப் போகும் என்.எல்.சி-க்காக 25,000 ஏக்கர் நிலத்தை, விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு அரசு ஏன் பறிக்க நினைக்கிறது? நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு கூறுகிறது. அந்த நிலங்களில் தினக்கூலிகளாக வேலை பார்ப்பவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா? வேலைவாய்ப்பு வழங்கப்படுமா? அவர்களின் எதிர்காலம் என்ன?
எங்களது முதன்மையான கோரிக்கை எல்லாம் விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இது எங்களது உரிமைக்கான போராட்டம். இதில் நிச்சயம் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. தொடர்ந்து என்.எல்.சி-க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சியினரும் முன்வர வேண்டும். எங்களது போராட்டம் தொடரும்.
இதுகுறித்த முழு வீடியோவை காண :







