முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டிற்கு வேண்டிய நீரை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்

காவேரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை இன்னமும் திறந்துவிடாது மவுனம் காப்பது கண்டனத்திற்குரியது என்றும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீரினை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்…

தமிழ்நாட்டின்‌ நெற்களஞ்சியமாக விளங்கும்‌ காவிரி டெல்டா பகுதியில்‌ வேளாண்‌ தொழிலை மேற்கொள்ள ஏதுவாக, மரபுரிமைப்படி இயல்பாக காவிரி நதி நீர்‌ கிடைக்கின்ற சூழ்நிலை மாறி, நமக்குரிய பங்கினை நாம்‌ வற்புறுத்திக்‌ கேட்டுப்‌ பெறுகின்ற சூழ்நிலைக்கும்‌, நீதிமன்றத்திற்குச் சென்று ஆணையைப்‌ பெறுகின்ற சூழ்நிலைக்கும்‌ தமிழ்நாடு தள்ளப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல்‌, அந்த நீதிமன்ற ஆணையைச் செயல்படுத்த மறுக்கும்‌ நிகழ்வுகளையும்‌ கர்நாடக அரசு அவ்வப்போது உருவாக்கி வருகின்றது.

கால்வாய்‌ப் பாசனத்தைச்‌ சார்ந்த நிலங்களில்‌ 85 விழுக்காடு நிலங்கள்‌ தமிழ்நாட்டின்‌ உயிர்‌ நாடியாக விளங்கும்‌ காவிரி நீரை நம்பியுள்ளன என்பதையும்‌, காவிரி நீரைப்‌ பயன்படுத்துவதில்‌ தமிழ்நாட்டிற்குள்ள உரிமை மிகப்‌ பழமை வாய்ந்தது என்பதையும்‌ அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா‌, மிகப்‌ பெரிய சட்டப்‌ போராட்டத்தின் மூலம்‌ காவிரி நடுவர்‌ மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில்‌ வெளியிடச்‌ செய்து சாதனை படைத்தார். பின்னர்‌, காவிரி நடுவர்‌ மன்றத்தின்‌ இறுதி ஆணை உச்ச நீதிமன்றத்தால்‌ சற்று மாற்றியமைக்கப்பட்டது.

இதனைத்‌ தொடர்ந்து, காவிரி நீர்‌ மேலாண்மை ஆணையம்‌ மற்றும்‌ காவிரி நதிநீர்‌ ஒழுங்குமுறைக்‌ குழு ஆகியவை அமைக்கப்பட்டன. காவிரி நீர்‌ மேலாண்மை ஆணையத்தின்‌ முக்கியமான பணி, காவிரி நதி நீர்‌ ஒழுங்குமுறைக் குழுவின்‌ உதவியுடன்‌ காவிரி நீரின்‌ இருப்பு, பங்கீடு, ஒழுங்குமுறை மற்றும்‌ கட்டுப்பாட்டைக் கண்காணித்து உச்ச நீதிமன்றத்‌ தீர்ப்பைச் செயல்படுத்துதல்‌ ஆகும்‌.

காவிரி நீர்‌ மேலாண்மை ஆணையத்தின்‌ பதினான்காவது கூட்டம்‌ 27-09-2021 அன்று டெல்லியில்‌ நடைபெற்றபோது, உச்ச நீதிமன்றத்
தீர்ப்பின்படி, செப்டம்பர்‌ மாதம்‌ 26ஆம்‌ தேதி வரை தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய 119.5 டி.எம்‌.சி. தண்ணீரில், 85.8 டி.எம்‌.சி.
தண்ணீரைத்தான்‌ கர்நாடகா தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டிருக்கிறது என்று தமிழ்நாடு சார்பில்‌ புகார்‌ தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக அதனை விடுவிக்குமாறு காவிரி நீர்‌ மேலாண்மை ஆணையம்‌ கர்நாடகாவிற்கு உத்தரவிட்டதோடு, இதுகுறித்து அக்டோபர்‌ மாதம்‌ 7ஆம்‌ தேதி நடைபெறும்‌ பதினைந்தாவது காவிரி நீர்‌ மேலாண்மை ஆணையக்‌ கூட்டத்தில்‌ விவாதிக்கப்படும்‌ என்றும்‌ கூறியிருந்தது. ஆனால்‌, காவிரி நீர்‌ மேலாண்மை ஆணையத்தின்‌ கூட்டம்‌ திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

இந்தச்‌ சூழ்நிலையில்‌, காவிரி நதிநீர்‌ ஒழுங்குமுறைக் குழுவின்‌ கூட்டம்‌ 11-10-2021 அன்று நடைபெற்றது. இந்தக்‌ கூட்டத்தில்‌, செப்டம்பர்‌ மாதம்‌வரை தரப்பட்டிருக்க வேண்டிய 25.84 டி.எம்‌.சி. தண்ணீரை கர்நாடகா இன்னும்‌ விடுவிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ தெரிவிக்கப்பட்டதாகவும்‌, இதனைத்‌ தொடர்ந்து அக்டோபர்‌ மாதம்‌ தரப்பட வேண்டிய 14 டி.எம்‌.சி. தண்ணீரையும்‌ சேர்த்து மொத்தமாக சுமார்‌ 40 டி.எம்‌.சி. தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும்‌, இந்தக்‌ கூட்டத்தில்‌ எடுக்கப்பட்ட முடிவுகள்‌ காவிரி நீர்‌ மேலாண்மை ஆணையத்தின்‌ தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் பத்திரிகைகளில்‌ செய்திகள்‌ வந்துள்ளன.

காவிரி நீர்‌ மேலாண்மை ஆணையம்‌ உத்தரவிட்டு 15 நாட்களுக்கு மேலாகியும்‌ கர்நாடகா, தமிழ்நாட்டிற்குத்‌ தேவையான தண்ணீரை இன்னமும்‌ திறந்துவிடாது மவுனம்‌ காப்பது கண்டனத்திற்குரியது. கர்நாடக அரசின்‌ இந்த மவுனம்‌ உச்ச நீதிமன்றத்‌ தீர்ப்பை அவமதிப்பதற்குச் சமம்‌. இதன் மூலம்‌ டெல்டா விவசாயிகள்‌ துர்ப்பாக்கியமான சூழ்நிலைக்குத்‌ தள்ளப்பட்டு இருக்கிறார்கள்‌.

எனவே, தமிழ்நாடு முதல்வர் இதில்‌ உடனடியாகத் தலையிட்டு, மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தத்தைக்‌ கொடுத்து, அதன் மூலம்‌ கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நீரைப்‌ பெற்றுத்‌ தருமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்”‌. என தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனாவால் உயிரிழந்த கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை

Gayathri Venkatesan

சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் குறித்து அறிய அமைச்சர் உத்தரவு

Jeba Arul Robinson

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் முகாம்!

Nandhakumar