மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகமெங்கும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. திரைப்படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் வெளியாகி பல ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில் இரண்டாம் பாடலான சோழா சோழா பாடல் நேற்று வெளியானது. கிட்டத்தட்ட 20 மணி நேரத்தில் 30 லட்சம் பார்வைகளை யூட்யூபில் கடந்துள்ளது.
சோழா சோழா பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த படத்தின் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன், இந்த ஆல்பத்திலேயே மிகக் குறைவான நேரத்தில் எழுதிய பாடல் இதுதான் எனவும் ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்தோம் எனவும் தனது பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், “லாக் டவுனின் தொடக்க நாட்கள், சிறுநீரகக் கல்லால் வலி இருந்த போது மருத்துவமனைக்குக்கூட செல்லவியலாத நெருக்கடியில் தடுமாறிக்கொண்டிருந்தேன். அந்த சூழலில் zoom meeting -ல் அமர்ந்து எழுதிய பாடலே சோழா சோழா பாடல். மதியம் நான்கு மணி எழுதத் தொடங்கி கடகடவென முடித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “போர்கள வெற்றிக் கொண்டாட்டம், மது, அது உருவாக்கும் அவளின் நினைவு, வலி, அங்கிருந்து வெறிகொண்டு மீண்டும் போர்களத்துக்குள் நுழைதல் என இந்தப் பாட்டின் தேவையை மிக விரிவாக இயக்குநர் எடுத்துரைத்ததால் எழுத மிக எளிதாக இருந்தது என தெரிவித்த அவர் அந்நாட்களின் நினைவுகள் நிழலாடுகின்றன. மறக்க முடியாத நாட்கள். உடனிருக்கும் ஒவ்வொருவருக்கும் அன்பு” எனவும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அ.மாரித்தங்கம்







