மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தின் சோழா சோழா பாடல் வெளியாகியுள்ளது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. செப்டம்பர் 30 உலகமெங்கும் வெளியாகும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என நட்சத்திர பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் இந்த திரைபடத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திரைப்படத்தின் முதல் பாடலாக பொன்னிநதி வெளியாகி பல ரசிகர்களை கவர்ந்த நிலையில் திரைப்படத்தின் இரண்டாம் பாடலான சோழா சோழா பாடல் இன்று வெளியாகியுள்ளது. ஆதித்த கரிகாலனை பற்றி பேசுகிறது இப்பாடல்.
ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான இந்த பாடலை கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். மேலும் விதம் மஹாலிங்கம் மற்றும் நகுல் அப்யங்கர் உள்ளிட்டோர் பாடி உள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த பாடல் வெளியானது.
அ.மாரித்தங்கம்








