இன்னும் 4 நாட்களில் தான் கைது செய்யப்படுவேன் என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோதியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கலால் வரி விதிப்புக்கான கொள்கை அம்மாநில அரசால் சமீபத்தில் திரும்பப்பெறப்பட்டது. டெல்லியில் உள்ள மது ஆலை முதலாளிகளுக்கு பலன் கிடைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் காரணமாக கலால் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மணிஷ் சிசோதியா மிகப் பெரிய பலன் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவரது வீடு உள்பட 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
டெல்லியில் உள்ள மணிஷ் சிசோதியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 14 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, மணிஷ் சிசோதியாவின் கணினி, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மணிஷ் சிசோதியா உள்பட 15 பேர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இதில் முதல் குற்றவாளியாக மணிஷ் சிசோதியா குறிப்பிடப்பட்டுள்ளார்.
மேலும், மணிஷ் சிசோதியாவுக்கு தொடர்புடைய நிறுவனத்திற்கு மது வர்த்தகர் ஒருவர் ரூ. 1 கோடி நிதி அளித்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணிஷ் சிசோதியா மிகச் சிறப்பாக செயல்படக்கூடிய அமைச்சர் என்றும் ஆம் ஆத்மியை பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசின் தூண்டுதலால் சிபிஐ சோதனை நடத்துவதாகவும் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் விமர்சித்திருந்தார்.
சோதனைக்குப் பிறகு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மணிஷ் சிசோதியா, நாங்கள் மிகச் சிறந்த நேர்மையாளர்கள் என குறிப்பிட்டார். தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தங்கள் பணியை நேர்மையுடன் தொடர்ந்து செய்வோம் என்றும் கூறினார். சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மணிஷ் சிசோதியா, கலால் வரி கொள்கை மாற்றம் சிறப்பான மாற்றம் என்றும் இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். ஆனால், உண்மையில் தான் குறிவைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் கலால் வரி கொள்கை மாற்றம் அல்ல என்றும் அர்விந்த் கெஜ்ரிவாலின் அமைச்சர் என்பதுதான் காரணம் என்றும் சிசோதியா குறிப்பிட்டார்.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் நரேந்திர மோடிக்கும் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையோன போட்டியாகவே இருக்கும் என்பதால், அர்விந்த் கெஜ்ரிவாலை தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே தான் குறிவைக்கப்பட்டிருப்பதாக சிசோதியா தெரிவித்தார்.
சிபிஐ மூலமாகவோ அல்லது அமலாக்கத்துறை மூலமாகவோ இன்னும் 4 நாட்களில் தான் கைது செய்யப்படக்கூடும் என்றும் ஆனால் அதுபற்றி தான் கவலைப்படவில்லை என்றும் மணிஷ் சிசோதியா தெரிவித்தார்.











