அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“முதலமைச்சர் விஜய் பத்திரிகையாளர்களையும் சந்திப்பதில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியவில்லை. அரசு செயல்படுகிறதா, இல்லையா என்பதுகூட மக்களுக்குத் தெரியாத அளவுக்கு தவெக ஆட்சி நடைபெறுகிறது. ஆறு மாதங்களில் சிறப்பான ஆட்சியை வழங்குவதாகச் சொல்லிவிட்டு, துயரமான ஆட்சியை மக்களுக்கு வழங்கியுள்ளனர்.
பொருளாதாரத்தை ஒப்பிடலாம். ஆனால், கடந்த கால குற்ற நிகழ்வுகளை ஒப்பிடுவது சரியல்ல. அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குத்தான் உங்களுக்கு ஆட்சியை வழங்கியுள்ளார்கள். சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது அரசின் கடமை.
சரியான முறையில் நிர்வாகம் செய்யப்பட்டிருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கும். காவல்துறை அதிகாரிகளுக்குச் சரியான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை. அவ்வப்போது முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும். முதலமைச்சரையே மூன்று நாட்களாகப் பார்க்க முடியாத சூழல் இருக்கிறது.
பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ. மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இந்தச் செயலுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டின் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.




