தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

நவம்பர் 15-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், “இன்று, நவம்பர் 11, 2026 அன்று காலை 08:30 மணி நிலவரப்படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது; இது வளிமண்டலத்தின் இடை அடுக்கு வரை நீண்டுள்ளது. இதன் தாக்கத்தால், நவம்பர் 13, 2026 வாக்கில் தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி (Low-Pressure Area) உருவாக வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14 வாக்கில் மேலும் வலுவடைந்து, நவம்பர் 15 வாக்கில் அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Depression) மாறக்கூடும்.

இதன் விளைவாக, நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அந்தமான் கடல் பகுதியிலும், நவம்பர் 14 முதல் 16 வரை தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீசக்கூடும்; காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் இருக்க வாய்ப்புள்ளது. மேலும், நவம்பர் 15 முதல் 17 வரை தென்மேற்கு வங்கக் கடலிலும், நவம்பர் 16 முதல் 17 வரை மத்திய வங்கக் கடலிலும் காற்றின் வேகம் அதிகரித்து, மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.