கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ விவகாரம்: தவெக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!

கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீதான புகார் விவகாரத்தில் தமிழக அரசு உண்மையை மறைக்கிறதா என வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அண்ணாமலை இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்தாரா, முதல்வர் அலுவலகத்திற்குப் புகார் சென்றதா, முதல்வர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்து எச்சரித்தாரா என்பவை பற்றி ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையா, இல்லையா என்ற குழப்பம் நீடிக்கிறது.

இந்தச் சூழலில், மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணின் புகழ்பெற்ற கார்ட்டூன் ஒன்று நினைவுக்கு வருகிறது. இதே குற்றச்சாட்டு, ஒரு சாமானியக் குடிமகன் மீது எழுந்திருந்தால், இந்த அரசாங்கம் இதே அளவு பொறுமையுடன், புகார் வந்ததா, வரவில்லையா என்று விவாதித்துக் கொண்டிருக்குமா? ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?

தமிழகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அதைச் செயலிலும் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதைத் தமிழக அரசு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.