கனடாவின் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் மானிந்தர் சித்து நவம்பர் 12 -வியாழக்கிழமை ஹைதராபாத் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள CII Partnership Summit 2026 மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டிற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை வகிக்கிறார். ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
மூன்று மாதங்களில் மூன்றாவது பயணம்!
இதுகுறித்து கனடாவின் சர்வதேச வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கனடா – இந்தியா இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை ஆழப்படுத்தவும், லட்சியமிக்க விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தை (CEPA) இறுதி செய்வதற்கான பணிகளைத் தொடரவும் அமைச்சர் மானிந்தர் சித்து இந்த வாரம் இந்தியாவில் உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்த மானிந்தர் சித்து, கனடா வர்த்தகக் குழுவுக்குத் தலைமை தாங்கினார். அதே மாதத்தில் மும்பைக்கும் பயணம் மேற்கொண்டார். இந்த இரு பயணங்களின்போதும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்து, CEPA ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்முறையாக இந்தியா வந்த அவர், அப்போது நடைபெற்ற CII Partnership Summit மாநாட்டிலும் பங்கேற்றிருந்தார்.
இறுதிக்கட்டத்தில் பொருளாதார ஒப்பந்தப் பேச்சுவார்த்தை!
இந்தியா – கனடா இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே ஐந்து சுற்றுகளைக் கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் அடுத்தகட்டமாக, அடுத்த வாரம் கனடாவின் ஒட்டாவா நகரில் இரு நாடுகளின் பேச்சுவார்த்தைக் குழுக்களும் சந்திக்க உள்ளன. சில விவகாரங்களில் தீர்வு எட்டப்படாமல் இருந்தால், நவம்பர் மாத இறுதிக்குள் மேலும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
டிசம்பரில் மோடி கனடா பயணம்!
இந்தியா – கனடா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது குறித்து, கடந்த ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடியும், கனடா பிரதமர் மார்க் கார்னியும் சந்தித்துப் பேசியிருந்தனர். இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு மார்ச் மாதம் கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா வந்து, பிரதமர் மோடியைச் சந்தித்தபோது இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் முறைப்படி தொடங்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான இலக்கை இரு நாடுகளும் நிர்ணயித்துள்ளன. கடந்த மே மாதம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்தபோதும் கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த இலக்கை மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
வரும் டிசம்பர் மாதம் பிரதமர் மோடி கனடாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், அப்போது இந்தியா – கனடா இடையேயான பொருளாதார ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை மட்டுமே அதிகம் சார்ந்திருக்கும் வர்த்தக நிலையிலிருந்து வெளியேறி, பிற நாடுகளுடனான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த கனடா முயற்சித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவுடனான பொருளாதார ஒப்பந்தத்தை இறுதி செய்வது கனடா அரசின் முக்கிய முன்னுரிமையாக உள்ளது.




