மழைநீர் வடிகால் பள்ளங்களால் உயிரிழப்பு: நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்காக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை கண்டித்துள்ளார்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காகத் தோண்டப்படும் பள்ளங்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி திறந்த நிலையில் விடப்படுவதால் விபத்துகள் ஏற்படுவதாகப் பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து கட்டுமானக் கம்பிகள் தலையில் பாய்ந்ததில் ஹரிபிரசாத் என்ற 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

மரணக் குழிகளாக மாறும் மழைநீர் வடிகால் பள்ளங்கள்! தவெக அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்!

“சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே எவ்விதப் பாதுகாப்புத் தடுப்புகளுமின்றித் திறந்த நிலையில் விடப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்ததில், கட்டுமானக் கம்பிகள் தலையில் பாய்ந்து, ஹரிபிரசாத் என்ற 25 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைக் கனக்கச் செய்கின்றன. தவெக அரசின் அலட்சியத்தால் அநியாயமாக உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மழைக்காலம் நெருங்கும் வேளையில், ஆங்காங்கே மழைநீர் வடிகால் பள்ளங்கள் தோண்டப்படுகின்றன. அதற்குள் மழை பெய்துவிட்டால், தோண்டிய பள்ளங்களை மூடாமலும், பாதுகாப்பு வேலிகள் அமைக்காமலும் அப்படியே விட்டுவிடுகின்றனர். இதனால் ஏராளமான விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதை நாமே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால், Reels எடுப்பதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் முதல்வரும் அவரது அமைச்சர்களும், சாமானிய மக்களின் உயிர்களைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இனியும் இந்த நிலை தொடரக் கூடாது!

மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய அரசின் நிர்வாக அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பலியாகும் அவலத்திற்கு, இனியாவது முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, இந்தச் சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.