”டாஸ்மாக் மூலமாக அரசு கஜானாவுக்கே திரும்பிய பொங்கல் பரிசு 3 ஆயிரம் ரூபாய்” – அன்புமணி ராமதாஸ் …..!

பொங்கலை முன்னிட்டு அரசு வழங்கிய மூவாயிரம் ரூபாயானது டாஸ்மாக் மூலமாக அரசு கஜானாவுக்கே திரும்ப வந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்பமான கொடுத்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி கலந்து கொண்டு விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் செய்தார்.

இதனை தொடர்ந்து பதிரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர், ”கடந்த முறை எதிர்க்கட்சிகள் சிதறி இருந்ததால் திமுக எளிதாக வெற்றி பெற்றது. இந்த முறை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து விட்டோம். அதனால் திமுக வெற்றி பெற முடியாது.

அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்ற பயத்தில் முதலமைச்சர் ஏதேதோ  பேசி கொண்டு இருக்கிறார். அதிமுக கூட்டணியில் இணைந்திருக்கும் கட்சியின் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. ஜாபர் சாதிக் என்ற திமுக நிர்வாகியை டெல்லியில் கைது செய்தனர். அவர் 3000 கோடி ரூபாய் அளவுக்கு போதை பொருள் வர்த்தகம் செய்திருக்கிறார்.

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே மோசமான போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது.  பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து உள்ளது. திமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளில் 217 பெண் குழந்தைகள் கொலை செய்யப்பட்டிரக்கிறார்கள். அவர்களில் 7 பேர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டைகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்பணம் டாஸ்மாக் மூலம் மீண்டும் தமிழ் நாடு அரசுக்கே வந்துவிட்டது.

12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முதலீடு வந்துள்ளதாகவும் , 34 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பொய்யான அறிக்கையை எழுதி ஆளுநர் உரையில் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடிக்கு குறைவாகத்தான் தொழில் முதலீடு வந்துள்ளது.

தமிழக மக்கள் திமுக ஆட்சியை அகற்ற தயாராகி விட்டார்கள். அதிமுக தலைமையிலான எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. நிச்சயம் 2026 இல் அதிமுக தலைமையிலான அரசு அமையும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.