“ஊழல் ஊற்றான திமுக அரசை ஆட்சியிலிருந்து மக்கள் ஓட விடுவர்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ஊழல் ஊற்றான திமுக அரசை ஆட்சியிலிருந்து மக்கள் ஓட விடுவர் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

ஊழல் ஊற்றான திமுக அரசை ஆட்சியிலிருந்து மக்கள் ஓட விடுவர் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். b

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

“நகராட்சி நிர்வாகத்துறை திமுக அமைச்சர் கே.என்.நேரு ரூ.1,020 கோடி ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை புகார் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களின் மதிப்பில் 7.5% முதல் 10% வரை கட்சி நிதியாக லஞ்சம் பெற்று ஊழல் செய்துள்ள புகாரின் மீதான விசாரணையைத் தற்போது தொடங்கியுள்ள நிலையில், இதே துறையில் பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலையை விற்று ரூ.888 கோடி ஊழல் புரிந்த புகாரும் அமைச்சர் நேரு மீதுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://x.com/NainarBJP/status/2009211385981673845

இதுமட்டுமல்லாது, கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஊழல் நடக்காத துறையே இல்லை எனலாம். நீர்வளத்துறை அமைச்சரின் மணல் கடத்தல் ஊழல், மீன்வளத்துறை அமைச்சரின் சொத்துக் குவிப்பு ஊழல், கைத்தறி அமைச்சரின் நூல் கொள்முதல் ஊழல், முன்னாள் அமைச்சரின் செம்மண் கடத்தல் ஊழல், போக்குவரத்துத் துறை ஊழல், சென்னை மாநகராட்சி கழிவறை பராமரிப்பு ஊழல், மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் என திமுக செய்த ஊழல் மோசடிகளைக் கணக்கிட்டால், பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் ஒரு புத்தகமே வெளியிடலாம்.

ஒன்று நிச்சயம்! பூட்டிக் கிடக்கும் ஊழல்கள் அனைத்தும் மக்கள் மேடையில் வெளிப்படுத்தப்படும். மீண்டுமொரு முறை அரியணை ஏறி ஊழல் செய்யத் திட்டமிடும் திமுகவின் எண்ணம் நசுக்கப்படும்! இத்தனை நாட்களாக மக்கள் வரிப்பணத்தைக் கையாடல் செய்து, பணக்கட்டுகளை எண்ணிய திமுக உடன்பிறப்புகள், கூடிய விரைவில் சிறைக்கம்பிகளை எண்ணுவர்!”

இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.