நடிகர் விஜய் – ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ’ஜன நாயகன்’. அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீது ஏராளமான எதிர்ப்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபிதியோல், நரேன், மமிதா பைஜு, பிரியா மணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு இப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைகாததால் படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒத்திவைப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
இது விஜயின் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அன்புள்ள விஜய் அண்ணா, பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை. இதைவிடப் பெரிய புயல்களையெல்லாம் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும், ஜனநாயகன் வெளியாகும் நாளில்தான் உண்மையான திருவிழா தொடங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.







