ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நடத்திய கூட்டு தாக்குதலை தொடர்ந்து மேற்காசிய பிராந்தியத்தில் போர் நடைபெற்று வருகிறது. போர் எதிரொலியாக ஹார்முஸ் நீரிணைப்பகுதியை ஈரான் மூடியுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஈரானுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும், இதனால் 5 நாட்களுக்குப் போர் நிறுத்தத்தை அறிவிப்பதாகவும் அமெரிக்கா அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்புடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடலில் மேற்கு ஆசிய நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றம், ஈரான் மீதான இஸ்ரேல்&அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல் மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்ட விவகாரம் உள்ளிட்டவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜனாதிபதி ட்ரம்ப் அவர்களுடன் தொலைப்பேசியில் உரையாடினேன்; மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து நாங்கள் பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டோம். பதற்றத்தைத் தணிப்பதையும், கூடிய விரைவில் அமைதியை மீட்டெடுப்பதையும் இந்தியா ஆதரிக்கிறது. ஹார்முஸ் நீரிணை திறந்த நிலையிலும், பாதுகாப்பாகவும், அணுகக்கூடிய வகையிலும் இருப்பதை உறுதி செய்வது உலகம் முழுவதற்கும் இன்றியமையாததாகும். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய முயற்சிகள் தொடர்பாகத் தொடர்ந்து தொடர்பில் இருக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் குறித்து ஈரான் அதிபர் மற்றும் வளைகுடா நாட்டு தலைவர்களோடு பிரதமர் நரேந்திர மோடி கடந்து சில நாட்களாக தொலைபேசியில் ஆலோசித்து வந்தார்.
மேலும் இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய போது அமைதிப் பேச்சு வார்த்தை மூலம் மட்டுமே இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







