நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை 9-வது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படுகிறது.
முதல் கட்ட கூட்டத் தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி மாதம் 13ம் தேதி முடிவடைகிறது. 2-வது கட்ட கூட்டத் தொடர் மார்ச் 9-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் மொத்தம் 30 அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் அரசு திட்டமிட்டுள்ளது. உலகளவில் இருக்கும் நிலையற்ற பொருளாதார சூழலில் நடுத்தர வர்க்கத்தினருக்கு திருப்தியளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.







