“அடுத்த ஜூன் மாதம் திமுக ஆட்சியில் இருக்காது” – நயினார் நாகேந்திரன்!

திமுக கூட்டணிக்குள்ளே குழப்பங்கள் இருக்கின்றன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமணத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், “தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமி தான் மேற்கொண்டு வருகிறார். பாரதிய ஜனதா கட்சி யாரையும் எங்கேயும் மிரட்டவில்லை. தேவையில்லாமல் பாரதிய ஜனதா கட்சி பற்றி தமிழக வெற்றிக் கழகத்தினர் பேசுவது அர்த்தமற்றது, நியாயமற்றது. இதுபோல பேச வேண்டாம் என்று தமிழக வெற்றி கழகத்தினரை கேட்டுக்கொள்கிறேன்.

எங்களுடைய தோழமைக் கட்சியாக இருந்தாலும் மற்ற கட்சிகளின் உள்கட்சி விவகாரங்கள் குறித்து நாங்கள் பேச மாட்டோம். இன்னும் எந்தெந்த கட்சிகள் வர வாய்ப்புள்ளதோ அந்த கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கும். திமுக கூட்டணிக்குள்ளே குழப்பங்கள் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் குழப்பம் இருப்பதால்தான் அவர்கள் அது போல் பேசி இருக்கிறார்கள்.

ஒரு மாதத்திற்கு முன் எங்களை கேலியும் கிண்டலும் பண்ணிக் கொண்டிருந்தவர்கள், இப்போது அவர்கள் பற்றிய பேச வேண்டிய சூழல் வந்திருக்கிறது. தேர்தல் அறிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பது என் கருத்து. அடுத்த ஜூன் மாதம் திமுக ஆட்சியில் இருக்காது. ஆட்சியில் இல்லாத போது கொண்டு வருவோம் என்று கூறினால் அதையும் நம்பி சில பேர் இருக்கிறார்கள். இதனையும் எந்த பத்திரிக்கையும் பெரிது படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.