காதலை கண்டித்ததால் உயிரை மாய்த்துகொண்ட கல்லூரி மாணவி – கல்லூரி முதல்வர் கைது!

சிவகாசியில் தனியார் கல்லூரி மாணவியின் காதலை கண்டித்ததால் மாணவி உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆசாரி காலனியை சேர்ந்த பாண்டியராஜன்-முருகேஷ்வரி தம்பதியின் மகள் சோலைராணி (வயது 19). பாண்டியராஜன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் முருகேஸ்வரி தூய்மை பணி செய்து வருகிறார். இவரது மகள் சோலைராணி சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பி.சி.ஏ படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு இதே கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் சக மாணவ மாணவியர் மத்தியில் வைரலானதன் தொடர்ச்சியாக கல்லூரி முதல்வரின் உதவியாளர் மணிமாறன் மூலமாக கல்லூரி முதல்வரின் பார்வைக்கு வந்துள்ளது. இதையடுத்து கடந்த 20ம் தேதி மாணவி மற்றும் மாணவியின் தாய் முருகேஸ்வரியை நேரில் அழைத்த கல்லூரி நிர்வாகம் மாணவியை கண்டித்து அவரிடம் மன்னிப்பு கடிதம் பெற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற மாணவி சோலைராணியை அவரது தாய் முருகேஸ்வரியும் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சோலைராணி அன்று (20ம் தேதி) இரவு வீட்டில் வைத்து தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே மாணவியின் காதலை கண்டிப்பதாக அவரை மன உளைச்சலாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி முதல்வர் அசோக், முதல்வரின் உதவியாளர் மணிமாறன், மணிமாறனுக்கு மாணவியின் புகைப்படத்தை அனுப்பிய சக மாணவி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிட வலியுறுத்தியும் கல்லூரி மாணவர்கள் கடந்த 23ம் தேதி கல்லூரி நுழைவாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறை உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

தொடர்ந்து உயர் கல்வித்துறை மதுரை மண்டல துணை இயக்குநர் கலைச்செல்வி கல்லூரியில் விசாரணை நடத்தியதை தொடர்ந்து முதல்வரின் உதவியாளர் மணிமாறனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நகர் காவல் நிலைய போலீசார் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி முதல்வர் அசோக் மற்றும் முதல்வரின் உதவியாளர் மணிமாறன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து முதல்வர் அசோக்கை கைது செய்து சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுனில்ராஜாவிடம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை நீதிபதி ஜாமீனில் விடுவித்தார். மேலும் இந்த வழக்கில் முதல்வரின் உதவியாளரான மணிமாறனை போலீஸ தேடி வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.