சிவகாசியில் தேமுதிகவின் “உள்ளம் தேடி இல்லம் நாடி” கேப்டன் ரத யாத்திரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் சிவகாசி என்.ஆர்.கே.ஆர் சாலையிலிருந்து பைபாஸ் சந்திப்பு சாலை வரை ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்களுக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மேடையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “விருதுநகர் என்றாலே கேப்டன் கோட்டை என்பதை விருதுநகர் நிரூபித்துள்ளது. இலங்கை வாழ் தமிழர்கள் கொடுத்த அன்பு பரிசுதான் நான் பிரச்சாரம் செய்யும் ரதம். மக்கள் மீது கொண்ட அன்பினால் ரதத்தை பரிசாக கொடுத்துள்ளார்கள்.
விருதுநகர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் விஜயபிரபாகர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார், ஆனால் அந்த வெற்றி மறைக்கப்பட்டுவிட்டது, நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியின் நிரந்தர வேட்பாளராக இருக்கிறார், இருந்து கொண்டே இருப்பார்.
வரும் தேர்தலில் எங்கு போட்டியிடுகிறார் என்பதை அனைவரின் ஆசிர்வாதத்தோடு அறிவிப்போம். கடந்த தேர்தலில் பறிக்கப்பட்ட வெற்றி உறுதி செய்யப்பட்ட வெறியாக விஜயபிரபாகரனுக்கு மக்கள் தருவார்கள்.
பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. 2026 தேர்தலுக்கு பின் பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டு மரணம் நடக்காமல் மக்களை தேமுதிக காப்பாற்றும், காப்பீடு தொகை பெற்றுத்தரும். சீனா பட்டாசுகள் இந்தியாவிற்குள் வருவது தடுக்கப்படும். தேமுதிக எந்த தொகுதியில் வெற்றி பெற்றாலும் அந்த தொகுதியை தமிழகத்தில் முதன்மை தொகுதியாக மாற்றி காட்டுவோம். கேப்டன் நம்மைவிட்டு மறையவில்லை, கேப்டன் ஒருவர்தான் லட்சக்கணக்கான கேப்டன்களை உறுவாக்கிவிட்டு சென்றிருக்கிறார்.
என் வாழ்நாள் இனி உங்களுக்காகவே, தொண்டர்கள் தான் என் உயிர். 2026 தேர்தல் உங்களுக்கான தேர்தல். கூட்டணி குறித்து நான் என்ன முடிவு எடுப்பேன் என தொண்டர்கள் பயப்பட வேண்டாம், நீங்கள் யாரை விரும்புகிறீர்கள் அவர்களுடன் தான் கூட்டணி அமைப்பேன், தொண்டர்கள் நிர்வாகிகள் விரும்பும் கூட்டணியை அமைப்பேன். முதல்கட்ட பிரச்சாரம் வரும் பிப்ரவரி 3ம் தேதியுடன் நிறைவுபெரும் நிலையில் சென்னைக்கு சென்று ஒரு வாரத்தில் கூட்டணி முடிவுகளை அறிவிப்பேன். நான் முதல்வராக வேண்டும், துணை முதல்வராக வேண்டும் என தொண்டர்கள் ஆசைப்படுகிறீர்கள். ஆனால் உங்களை அரசு பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பதே எனது ஆசையாக உள்ளது என்றார்.
இதனை தொடர்ந்து விஜயபிரபாகரன் பேசுகையில், “தேர்தலில் நான் தோல்வி அடைந்திருக்கலாம். ஒவ்வொருவரின் இதயத்தில் இடம்பிடித்துள்ளதை தவிர வேறு ஏதும் எனக்கு தேவையில்லை. நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் யார் வெற்றி பெற்றார் என்பது உங்களுக்கு தெரியும். விருதுநகர் மக்கள் என்னை கைவிடவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் சூழ்ச்சி என்ன என்பது எனக்கு புரிகிறது. 2026 தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணிக்கு செல்கிறதோ அந்த கூட்டனிதான் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் ஒரே ஒரு பெண் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மட்டுமே. தேமுதிக ஆதரவு தரும் கூட்டணிக்கு 234 தொகுதிகளிலும் ஆதரவு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.







