1951ல் இருந்ததை விட இப்போது சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருமடங்காகிவிட்டதாகவும், சமூகம் பிரிக்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
1923 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Guild of Service (Central) என்ற சமூக சேவை நிறுவனத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி, சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “சமூகத்திற்கு சேவை செய்வது நம் கலாச்சாரத்திலேயே இருக்கிறது. நாம் நமக்காக மட்டுமல்ல, பிறருக்காகவும் வாழ வேண்டும் என்பதை நம் மூதாதையர்கள் கற்றுத் தந்துள்ளனர். அந்த பண்பு நமது மரபணுவிலேயே உள்ளது. இந்த நாகரீக சமூகக் குடும்பத்தைதான் நாம் ’பாரத்’ என்று அழைக்கிறோம்.
2047ல் நம்முடைய 100 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில், உலகத்திற்கே
நற்குணங்களில் தலைசிறந்து விளங்கும் நாடாக நாம் திகழ வேண்டும். ஐரோப்பிய நாடுகள் உலகிலேயே வலிமையாக இருந்த போது, அது காலனியாதிக்கத்திற்கு தான் வழிவகுத்தது. மிகப்பெரிய அளவில் சுரண்டல்கள் நடைபெற்றன.
அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும் வலிமையான போது, இரு நாடுகளும் தங்கள்
கொள்கைகளால் வேறுபட்டு, எண்ணற்ற மக்களுக்கு வெறும் துயரத்தை மட்டுமே
கொடுக்கின்றன. இதில் ஒன்று ஜனநாயகத்தின் பெயராலும், இன்னொன்று பொதுவுடைமை சிந்தாந்தத்தின் பெயராலும் நடக்கிறது.
சீனா சமீப காலமாக வலிமையடைவது எத்தகைய பாதிப்புகளை உருவாக்கி வருகிறது என்பதை நாம் கண்கூடாக நம் அருகிலிருக்கும் இலங்கை மூலமே பார்த்து வருகிறோம். நான் பாகிஸ்தான் பற்றி பேசவில்லை. ஆனால், இந்தியா உலக அரங்கில் வலிமை அடையும் போது இவ்வாறெல்லாம் நடக்காது. வசுதேவ குடும்பகம் என்று இந்தியா கூறியதை உலகமே ஏற்றுக் கொண்டிருக்கிறது.
கொரோனாவின் போது என்ன நடந்தது என்று எண்ணிப் பாருங்கள். உலகமே செய்வதறியாது திகைத்த போது நம் நாடு தடுப்பூசிகளை உருவாக்கியது. பல நாடுகள்
தாங்கள் உருவாக்கிய தடுப்பூசிகளின் விலையை ஏற்றிக் கொண்டிருந்த போது, நாம்
சுமார் 150 நாடுகளுடன் தடுப்பூசிகளை பகிர்ந்து கொண்டிருந்தோம். நம்முடைய
தேவைகளே பூர்த்தி செய்ய முடியாமல் திணறிய போதும் நாம் அதை செய்தோம். இது தான் இந்தியா.
இதையும் படியுங்கள் : ”உச்சநீதிமன்ற தீர்ப்பு வெற்றிப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது” – எடப்பாடி பழனிசாமி பேட்டி
உலகில் 3ல் 2 பங்கு நாடுகள் குரலற்றவையாக இருக்கின்றன. அவை, இந்தியா தங்கள்
குரலாக எதிரொலிக்கும் என்று நம்புகின்றன. இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம், அனைத்து நாடுகளையும் உற்றுநோக்க வைக்கிறது. இந்தியா தான் இந்த உலகத்தின் நம்பிக்கை. நாம் இந்த நாட்டை பிளவுபடுத்தி, துண்டுகளாக, இடங்களாக பார்க்கவில்லை. ஒரு குடும்பமாக பார்க்கிறோம்.
காலனியாதிக்கவாதிகள் தான் நம் நாட்டை பிரித்தார்கள். 1951ல் இருந்ததை விட இப்போது சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருமடங்காகிவிட்டது. பழங்குடிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. புதுப்புது அடையாளங்களுடன் வருவோரின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. சமூகம் பிரிக்கப்படுகிறது. நாம் அடுத்தவர்களின் கண்களாக செயல்படும்போது தான் இத்தகைய பிரிவுகள் உருவாகின்றன.
ஆனால் நாம் நம்முடைய கண்களால் பார்த்தோமானால், ஒரு குடும்பமாகத் தான் இருக்கிறோம். இருக்க வேண்டும். இங்கே ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை. இங்கே இருக்கும் பிரச்னைகளை ஒரு குடும்பத்தின் பிரச்னையாகத் தான் கருதி தீர்க்க வேண்டுமே தவி, பிரிக்கக் கூடாது.
இந்தியாவில் 1.25 லட்சம் பேருக்கும், தமிழ்நாட்டில் 40,000 பேருக்கும் தொழுநோய் இருக்கிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் கூட தொட்டு சிகிச்சையளிக்க மறுப்பதை நான் பார்த்திருக்கிறேன். புறக்கணிக்கப்பட்ட மனிதர்களாகிய தொழுநோயாளர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு நாம் உதவ வேண்டும்” என்று தெரிவித்தார்.